எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறார்கள்: கொரோனா தடுப்பு பணிகளுக்கு மந்திரிகள் ஓராண்டு சம்பளத்தை வழங்க வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்


எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறார்கள்: கொரோனா தடுப்பு பணிகளுக்கு மந்திரிகள் ஓராண்டு சம்பளத்தை வழங்க வேண்டும் முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 April 2021 8:58 PM IST (Updated: 30 April 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மந்திரிகள் தங்களின் ஓராண்டு சம்பளத்தை வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் புதிதாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு முழு ஊரடங்கை கடந்த 27-ந் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 11-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயண், கோவிந்த் கார்ஜோள், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் தங்கிருந்து தொழில்கள் செய்து வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். அவ்வாறு ஊருக்கு வந்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும். பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா கண்காணிப்பு மையங்களை அமைப்பதிலும் கலெக்டர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை. உடனடியாக அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா கண்காணிப்பு மையங்களை திறக்க வேண்டும். தாலுகா அளவிலும் இத்தகைய மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும். மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள நமது மாநில எல்லைக்குள் இருக்கும் ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்களால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. இவற்றின் மீது கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டு தனிமையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மருந்து தொகுப்பு வழங்க கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மருந்து தொகுப்புடன் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க மருத்துவர்கள் அடங்கிய குழுக்களையும் அமைக்க வேண்டும். கிராமங்களில் செயல்படைகளை அமைத்து கொரோனா நோயாளிகளை கண்காணிக்க வேண்டும்.

மேலும் அந்த நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகள், மருந்துகளையும் வழங்க வேண்டும். அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும். இந்த பரிசோதனை முடிவு 24 மணி நேரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுக்கும் சரியான நேரத்தில் ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த இரண்டும் யாருக்கு மிக அவசியமோ அவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். நோய் தொற்று எந்த நிலையில் இருக்கும்போது ரெம்டெசிவிர் மருந்து வழங்க வேண்டும் என்ற விவரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட அளவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுக்கு எம்.எல்.ஏ.க்களின் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்குகிறார்கள். அதுபோல மந்திரிகள் தங்களது ஓராண்டு சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.


Next Story