நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 May 2021 12:35 AM IST (Updated: 1 May 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள விடுதி வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி டாக்டர்கள், செவிலியர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை, மே:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள விடுதி வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி டாக்டர்கள், செவிலியர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பட்ட மேற்படிப்பு டாக்டர்கள், செவிலியர்கள் திடீரென்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா அலை பெருகி வரும் நிலையில் தொற்றுக்கு ஆளாகும் டாக்டர்கள், செவிலியர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் டீன் ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

கொரோனா பாதிப்பு

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் பட்ட மேற்படிப்பு உறைவிட டாக்டர்களாகிய நாங்கள், வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் ஆகிய அனைவருக்கும் சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகி வருவதால், முதுநிலை பட்டதாரி டாக்டர்கள் வாரந்தோறும் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி அமர்த்தப்படுகிறோம். இதனால் நாங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகிறோம். 
தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் எங்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. தடுப்பூசி தீவிர தொற்றில் இருந்து எங்களை பாதுகாத்தாலும், எங்களிடம் இருந்து பிறருக்கு பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே எங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மிக அவசியம் ஆகும்.

தனி வார்டு

எனவே கல்லூரி வளாகத்துக்குள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தங்குவதற்கு தனியாக வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். உணவு, விடுதி வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். டாக்டர்களுக்கு கையுறை, முககவசம், கவச உடை ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்கச் செய்ய வேண்டும். 

எங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்வதால் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரவும் அச்சம் உள்ளது. எனவே சுகாதாரமான, அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட தனி வார்டு ஒதுக்க வேண்டும். எங்களது நிலையை அறிந்து தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். இந்த பேரிடர் காலத்தில் கொடிய பெருந்தொற்று அபாயத்தில் இருந்து எங்களை மீட்கவும், அதன்மூலம் பொது மக்களுக்கு சிறந்த சேவை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story