போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை திட்டியதாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கைது


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை திட்டியதாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 1:10 AM IST (Updated: 1 May 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை திட்டியதாக டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 47). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். 
இந்தநிலையில் கடந்த மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, காந்திநகரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி முன்பு தி.மு.க.வினர், அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஈஸ்வரன், அவரது அண்ணனும், அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளருமான முருகன் உள்பட 12 பேர் சேர்ந்து தி.மு.க.வினர் சிலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஈஸ்வரன், முருகன் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
இதற்கிடையே ஈஸ்வரன் நேற்று ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீசாரிடம், தனது மீது போடப்பட்ட வழக்கு குறித்து கேட்டு அவர் வாக்குவாதம் செய்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், இளஞ்செழியன் ஆகியோரை தகாத வார்த்தையில் பேசி, ஒருமையில் திட்டியதுடன், பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.

Next Story