கொரோனா பீதியால் விதவை பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்து சென்ற அவலம்


கொரோனா பீதியால் விதவை பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்து சென்ற அவலம்
x
தினத்தந்தி 30 April 2021 7:45 PM GMT (Updated: 30 April 2021 7:45 PM GMT)

சிக்பள்ளாப்பூர் அருகே கொரோனா பீதியால் சாலையில் மயங்கி விழுந்து இறந்த பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்து சென்ற அவல சம்பவம் நடந்து உள்ளது.

சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூர் அருகே கொரோனா பீதியால் சாலையில் மயங்கி விழுந்து இறந்த பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்து சென்ற அவல சம்பவம் நடந்து உள்ளது. 

விதவை பெண்

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதுபோல உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதால் சிகிச்சை கிடைக்காமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். 

மேலும் சாதாரண நோய்களுக்கு கூட இறப்பவர்கள் உடலை கூட அடக்கம் செய்ய கொரோனா பீதியால் உறவினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் மயங்கி விழுந்த இறந்த பெண்ணின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்து சென்ற அவலம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா குரதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகலா. இவருக்கு திருமணம் முடிந்து கணவரும், 2 குழந்தைகளும் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரகலாவின் கணவர் உடல்நலக்குறைவால் இறந்தார். 

இதனால் தனது குழந்தைகளுடன் சிந்தாமணி டவுனில் சந்திரகலா வசித்து வந்தார். மேலும் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் சந்திரகலா அவதிப்பட்டுவந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்றார். ஆனாலும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது. 

பொக்லைனில் எடுத்து செல்லப்பட்ட உடல்

இந்த நிலையில் நேற்று சந்திரகலா சிந்தாமணியில் இருந்து குரதஹள்ளி கிராமத்திற்கு வந்து இருந்தார். பின்னர் அவர் சிந்தாமணிக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கம் போட்டு சாலையில் விழுந்தார். சிறிது நேரத்தில் சந்திரகலா இறந்து விட்டார். இதனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சந்திரகலா உடலை எடுத்து செல்ல ஆம்புலன்சுக்கு கிராம மக்கள் போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை. 

இதனால் அங்கு நின்று கொண்டு இருந்த பொக்லைன் எந்திரத்தில் சந்திரகலாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. 

கொரோனா பீதியால்....

இதுபற்றி அறிந்த சிந்தாமணி போலீசார் குரதஹள்ளி கிராமத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது உடல்நலக்குறைவால் சாலையில் மயக்கம் போட்டு சந்திரகலா விழுந்து இறந்ததும், கொரோனா பீதியால் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க கிராம மக்கள் தயக்கம் காட்டியதும், இதனால் அவரது உடல் பொக்லைன் எந்திரத்தில் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது. 

சந்திரகலாவின் உடலை பொக்லைன் எந்திரத்தில் எடுத்து செல்லும் காட்சிகளை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோைவ பார்த்தவர்கள் மனிதாபிமானம் செத்து போய் விட்டதா? என்று கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். 

Next Story