சேலத்தில், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிப்பு


சேலத்தில், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 30 April 2021 9:17 PM GMT (Updated: 30 April 2021 9:17 PM GMT)

சேலத்தில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகளை மூடியும், மின்இணைப்பை துண்டித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்:
சேலத்தில் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீரை வெளியேற்றிய 4 சாயப்பட்டறைகளை மூடியும், மின்இணைப்பை துண்டித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சாயப்பட்டறைகளில் ஆய்வு
சேலம் கொண்டலாம்பட்டி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதிகளில் செயல்பட்டு வரும் சில சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக சேலம் மாவட்ட அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கொண்டலாம்பட்டி கலர்க்காடு, தானங்காடு, சீலநாயக்கன்பட்டி பெருமாள்கோவில் மேடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த 4 சாயப்பட்டறைகள் வாரியத்தின் அனுமதி பெறாமலும், பூஜ்ஜிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்காமல் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் அந்த 4 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. மேலும் அந்த சாயப்பட்டறைகளில் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் கூறும் போது, சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெறாமலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றினாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் மூடுதல் உத்தரவு அளிக்கப்படும். மேலும் வீட்டு உபயோகம், குடோன் போன்றவற்றிற்கு மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை நடத்தினால் அபராதம் விதிக்க மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் வாரியத்தின் உரிமம் பெறாமல் சாயப்பட்டறை நடத்திய ஒருவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Next Story