கோயம்பேடு பஸ் நிலையத்தில் பிளஸ்-1 மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பிளஸ்-1 மாணவரிடம் பணம் பறித்த வழக்கில் 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்து இணை கமிஷனர் ராஜேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-1 மாணவர், தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு சென்னை கோயம்பேடு வந்தார். சென்னையில் எங்கு செல்வது? என தெரியாமல் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிய அவரை, ரோந்து பணியில் இருந்த கோயம்பேடு குற்றப்பிரிவு முதல்நிலை போலீஸ்காரர்கள் வேல்முருகன், அருண் கார்த்திக் ஆகியோர் விசாரித்தனர்.
மாணவர், தான் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிதாக தெரிவித்தார். அவரது பையில் சோதனை செய்தபோது, ரூ.63,500 இருந்தது. அந்த பணத்தை போலீஸ்காரர்கள் இருவரும் பறித்துக்கொண்டு மாணவரை தாக்கி விரட்டியடித்தனர். இதனால் மாணவர் அழுதுகொண்டே தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.
உடனடியாக சென்னை வந்த அவரது தந்தை, கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் ராஜேஸ்வரி உத்தரவின்பேரில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில் போலீஸ்காரர்கள் இருவரும் மாணவரை தாக்கி பணத்தை பறித்தது உறுதியானது. இதையடுத்து போலீஸ்காரர்கள் வேல்முருகன், அருண் கார்த்திக் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து இணை கமிஷனர் ராஜேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.