வாணியம்பாடி; சமூக இடைவெளியின்றி நடந்த மாட்டுச்சந்தை


வாணியம்பாடி; சமூக இடைவெளியின்றி நடந்த மாட்டுச்சந்தை
x
தினத்தந்தி 1 May 2021 2:11 PM GMT (Updated: 1 May 2021 2:11 PM GMT)

வாணியம்பாடியில் தற்காலிக வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள் மாடு விற்பனையில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் தற்காலிக வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள் மாடு விற்பனையில் ஈடுபட்டனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொரோனா தொற்று

வாணியம்பாடியில் கடந்த 2 மாதங்களில் 297 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 62 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த மாதத்தை விட இந்த மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கக் கோரி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

மும்முரமாக மாடு விற்பனை

வாணியம்பாடி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலைய பகுதியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று தற்காலிக வாரச்சந்தையின் ஒரு பகுதியாக மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அங்கு, பல்வேறு கிராமங்களில் இருந்து மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் காலகட்டத்தில் வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக நின்று மாடு விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கோரிக்ைக

எனவே மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், சுகாதாரத்தைக் பேணி காக்கவும், கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருப்பதைத் தடுக்கவும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story