கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பூக்கள்
சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்தளிக்காத நிலையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
கொடைக்கானல்:
பிரையண்ட் பூங்கா
கொடைக்கானல் நகரில் உள்ள பிரையண்ட் பூங்காவில், ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக அங்கு பல்வேறு ரகங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு தயாரான நிலையில், கொரோனா நோய்தொற்று காரணமாக பூங்கா மூடப்பட்டது. மலர் கண்காட்சியும் நடைபெறவில்லை.
இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் பூக்களே இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
பூத்துக்குலுங்கும் பூக்கள்
இந்தநிலையில் இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்காக, பிரையண்ட் பூங்காவை தயார்படுத்தும் பணி தொடங்கியது. அதன்படி பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அனைத்து செடிகளும் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் பூத்துள்ளன. தற்போது லட்சக்கணக்கில் பூக்கள் பூத்துள்ளதால், கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு தான் விருந்து அளிக்க முடியவில்லை.
அதாவது கொரோனா ஊரடங்கு காரணமாக, தற்போது பூங்கா மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பூக்களை பார்த்து ரசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செடிகளில் பூத்துக்குலுங்கும் பூக்கள் சுற்றுலா பயணிகளின் பார்வையில் படாமலேயே கருகி வருகின்றன. இதேபோல் பூங்கா பராமரிப்பு பணியும் மந்தநிலையில் உள்ளது.
Related Tags :
Next Story