7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை


7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 1 May 2021 3:23 PM GMT (Updated: 1 May 2021 3:23 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

திண்டுக்கல்:

வாக்கு எண்ணிக்கை 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6-ந்தேதி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

 இந்த 7 தொகுதிகளிலும் மொத்தம் 2 ஆயிரத்து 673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மேலும் ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டது. 

எனவே, 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களும், வாக்கு எண்ணும் மையத்தில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன. இங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்குகிறது.

14 மேஜைகள்
 
இதில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் தொடங்குகிறது. இதற்காக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு தனித்தனியாக வாக்கு எண்ணும் அறை அமைக்கப்பட்டு இருக்கிறது. 


அதில் ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு இருக்கின்றன.
ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் மேற்பார்வையாளர், உதவியாளர் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவார்கள். 

ஒவ்வொரு கட்டுப்பாட்டு எந்திரத்திலும் பதிவான வாக்குகளை முகவர்களுக்கு காண்பித்த பின்னரே எண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் அறிவிக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள் 

இதேபோல் தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 4 மேஜைகள் அமைக்கப்பட்டு, அதற்கும் மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வாக்கு எண்ணிக்கை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று சட்டமன்ற தொகுதி வாரியாக பணி ஒதுக்கப்பட்டது.

இன்று காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணப்படும் மேஜை ஒதுக்கப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் அலுவலர்கள், மையத்துக்கு வரும்படி உத்தரவிடப்பட்டு இருக்கிறது. 

ஒவ்வொரு மேஜையிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணி முழுமையாக கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இதற்காக வாக்கு எண்ணும் மேஜையின் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

அதிகாரிகள் ஆய்வு 

மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவ வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை போலீசார் உள்பட மொத்தம் 900 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

இதையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயலட்சுமி, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள், போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

Next Story