ஒரே நாளில் ரூ.7 கோடியே 52 லட்சத்துக்கு மது விற்பனை


ஒரே நாளில் ரூ.7 கோடியே 52 லட்சத்துக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 1 May 2021 11:02 PM IST (Updated: 1 May 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எதிரொலியாக ஒரே நாளில் ரூ.7 கோடியே 52 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை எதிரொலியாக ஒரே நாளில் ரூ.7 கோடியே 52 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தொழிலாளர்கள் 
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணியாற்றி வருகிறார்கள். தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.
பனியன் நிறுவனங்களில் சம்பளம் வழங்கும் நாளான சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் வருவாய் அதிகரித்து காணப்படும்.
டாஸ்மாக் கடைகளில் கூட்டம்
மே தினத்தையொட்டி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதுபோல் வாக்கு எண்ணும் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது.
இந்த இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்துக்கொண்டு தாங்கள் விரும்பிய மதுவை வாங்கிச் சென்றார்கள். சிலர் மொத்தமாகவும் மதுவை வாங்கிச்சென்றனர்.
ரூ.7 கோடியே 52 லட்சம்
திருப்பூர் மாவட்டத்தில் 252 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.4 கோடியே 50 லட்சம் முதல் ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை அன்று ரூ.5 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனையாகும். ஆனால் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதாலும், தேர்தல் முடிவு வெளியாகும் என்பதாலும் மது விற்பனை அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.7 கோடியே 52 லட்சத்துக்கு மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்திரபாண்டியன் தெரிவித்தார்.

Next Story