தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் முதலில் தெரியவரும்


தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் முதலில் தெரியவரும்
x
தினத்தந்தி 1 May 2021 6:24 PM GMT (Updated: 1 May 2021 6:24 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின் போது தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் முதலில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின் போது தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகள் முதலில் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
14 மேஜைகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
ஒரு தொகுதிக்கு தலா 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. அதுபோல் ஒரு தொகுதிக்கு தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 2 மேஜைகள் தனியாக போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதை தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் ஒரு மேஜைக்கு ஒரு நுண்பார்வையாளர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு வாக்கு எண்ணும் அலுவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து வாக்கு எண்ணும் சுற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கையை பொறுத்தும் வாக்கு எண்ணும் நேரம் அதிகரிக்கும்.
தாராபுரம்
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்கள் உள்ளனர். 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்கு எண்ணிக்கை 25 சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். காங்கேயத்தில் 26 வேட்பாளர்கள் உள்ளனர். 372 வாக்குச்சாவடிகள் உள்ளன. 25 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
அவினாசி தொகுதியில் 12 வேட்பாளர்கள் உள்ளனர். 401 வாக்குச்சாவடிகள் உள்ளன. 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். 535 வாக்குச்சாவடிகள் உள்ளன. 38 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. திருப்பூர் தெற்கு தொகுதியில் 20 வேட்பாளர்கள் உள்ளனர். 401 வாக்குச்சாவடிகள் உள்ளன. 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பல்லடத்துக்கு 39 சுற்றுகள்
பல்லடம் தொகுதியில் 20 வேட்பாளர்கள் உள்ளனர். 548 வாக்குச்சாவடிகள் உள்ளன. 39 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. உடுமலை தொகுதியில் 15 வேட்பாளர்கள் 380 வாக்குச்சாவடிகள் உள்ளன. 27 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மடத்துக்குளம் தொகுதியில் 15 வேட்பாளர்கள் உள்ளனர். 357 வாக்குச்சாவடிகள் உள்ளன. 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
தாராபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவு முதலில் தெரியவரும். பல்லடம் தொகுதியின் தேர்தல் முடிவு கடைசியாக தெரியவரும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story