திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு


திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு
x
தினத்தந்தி 2 May 2021 10:50 AM GMT (Updated: 2 May 2021 10:50 AM GMT)

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதியன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் போன்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் 170 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா. பொன்னையா வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீர் வசதி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா் பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும். உள்ளே வரும் முகவர்கள் வேட்பாளர்களை தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். அப்போது வழக்கமான அளவை விட கூடுதல் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டால் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காமல் வெளியே திருப்பி அனுப்பப்படுவார்கள்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு முக கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு வழங்குவதற்காக முக கவசங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் முகவர்கள் அனைவரும் உரிய சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணும் மையத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 3 ஆயிரத்து 200 அதிகாரிகள் பணியில் உள்ளனர். அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story