தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் சாலைகள் வெறிச்சோடின
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. சிறப்பு ரெயில்கள் பயணிகள் கூட்டம் இன்றி இயங்கின.
கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த தொழிற்சாலைகள், உணவு பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கின.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, வேன் உள்ளிட்ட பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. லாரிகள் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தன. துறைமுகத்தில் இருந்து மட்டும் சரக்கு ஏற்றிக்கொண்டு லாரிகள் சென்றன. பூங்காக்கள், கடற்கரைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடந்தன. அதே போன்று பால் கடைகள், மெடிக்கல்கள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கின. மக்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சிறப்பு ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற போதிலும், ரெயில்கள் பயணிகள் கூட்டம் இன்றி இயங்கின. இதனால், தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களும் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் முழு ஊரடங்கை யொட்டி நகரில் ஆள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சிறிய பெட்டிக்கடை முதல் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. ஓட்டல்கள் திறக்கப்பட்டு, பார்சல் சேவைகள் மட்டும் நடந்தன. கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நேற்று வழக்கம் போல அனைத்து சிறப்பு ரெயில் சேவை நடந்தது. ரெயில் நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் காணப்பட்டது.
இதேபோன்று ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், ஏரல், நாசரேத், குரும்பூர், உடன்குடி, விளாத்திகுளம் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்து இல்லாததால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மருந்து கடைகள், பால் பூத்துகள் மட்டும் இயங்கின.
Related Tags :
Next Story