நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


நாகை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 2 May 2021 6:23 PM GMT (Updated: 2 May 2021 6:23 PM GMT)

முழு ஊரடங்கையொட்டி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி

நாகப்பட்டினம்:
முழு ஊரடங்கையொட்டி நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சலூன், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கோவில்கள் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. முழு ஊரடங்கு காரணமாக முதல் நாளான சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நோய் தொற்று அதிகமாகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகள் மூட உத்தரவிடப்பட்டது.
முழு ஊரடங்கு
முழு ஊரடங்கையொட்ட நேற்று நாகை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம், ெரயில்வே ஸ்டேசன் ரோடு, பப்ளிக்ஆபீஸ் ரோடு, நீலா கீழ வீதி மற்றும் தெற்கு வீதி, பெரிய கடை வீதி, நாகூர் என அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.  பால், மருந்தகம், பெட்ரோல் பங்க் ஆகியவை திறக்கப்பட்டு இருந்தது.
அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தேவையில்லாமல் நாகை மாவட்டத்திற்குள் வருவோர்களை தடுப்பதற்காக மாவட்ட எல்லையான வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே போல் நகர பகுதிக்குள் மோட்டார் சைக்கிளில் சுற்றிதிரிவதை தடுக்க ஏழைப்பிள்ளையார் கோவில் தெரு, காடம்பாடி, புத்தூர் ரவுண்டானா ஆகிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டனர். பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓடாததாலும், ஆட்கள் நடமாட்டம் இன்றியும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 
வழிபாட்டு தலங்கள்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டது. புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.
எப்போதும் மக்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி கடற்கரை சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோக்கள் ஓடாமல் நின்றது. எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் நாகை-நாகூர் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாகையில் ஒரு சில உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் டி.வி.களில் தேர்தல் முடிவுகளை பார்த்து கொண்டிருந்தனர். 
திருமருகல்
 திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், ஏனங்குடி, புத்தகரம், வடகரை, கோட்டூர், வவ்வாலடி, திருப்புகலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தன. பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததாலும், ஆட்கள் நடமாட்டம் இன்றியும் சாலைகளில் வெறிச்சோடின. திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  
வேதாரண்யம் 
வேதாரண்யம் நகர் பகுதி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வணிக வளாகங்கள், சிறு கடைகள் என சுமார் 5000-க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஆட்டோ, வாடகை கார் மற்றும் வேன்களும் முழுமையாக ஓடவில்லை, போலீ£ர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டடு உள்ளனர். வேதாரண்யம் முக்கிய வீதிகளான வடக்குவீதி, மேலவீதி உள்ளிட்ட பகுதிகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூடப்பட்டது. வேதாரண்யம் கடற்கரை சாலை பூங்கா மற்றும் காந்தி பூங்கா, தியான மண்டபம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
நாகூர்
நாகையை அடுத்த நாகூரில் உள்ள பெரிய கடைத்தெரு, நியூ பஜார் சாலை, புதிய பஸ் நிலையம், மெயின் ரோடு கொத்தவால் சவாடி ஆகிய பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

Next Story