தி.மு.க.வின் கோட்டையாக மாறிய டெல்டா மாவட்டங்கள் தஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியது


தி.மு.க.வின் கோட்டையாக மாறிய டெல்டா மாவட்டங்கள் தஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 May 2021 2:19 AM IST (Updated: 3 May 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வின் கோட்டையாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மாறி உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.

தஞ்சாவூர்:-

தி.மு.க.வின் கோட்டையாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மாறி உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 8-ல் 7 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. 

18 தொகுதிகள்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 
இவற்றில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகள் ஏற்கனவே தி.மு.க. கைவசம் இருந்தன. பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 3 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் இருந்தன. பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான துரைக்கண்ணு இறந்த பிறகு பாபநாசம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

தி.மு.க. கோட்டையானது

சட்டசபை தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக களம் இறங்கியது. பாபநாசம் தொகுதியில் கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 
மீதமுள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் தி.மு.க.வும், ஒரு தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே தி.மு.க.வின் கோட்டையாக இருந்த தஞ்சை மாவட்டத்தை அ.தி.மு.க. தனது வசப்படுத்த முயற்சி மேற்கொண்டது. மெல்ல, மெல்ல எழுச்சி பெற்ற அ.தி.மு.க. தற்போது ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தஞ்சை மாவட்டத்தை தி.மு.க. முழுமையாக தன்வசப்படுத்தி உள்ளது. தன் வசம் இருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம் ஆகிய தொகுதிகளை அ.தி.மு.க. இழந்து உள்ளது.

தி.மு.க. அலை

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இதில் நன்னிலத்தை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்துள்ளது. 
நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் வேதாரண்யம் தவிர மற்ற 2 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி வென்றுள்ளது. 
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த தேர்தலில் தி.மு.க. அலை வீசி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Next Story