குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது


குமரியில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது
x
தினத்தந்தி 2 May 2021 8:58 PM GMT (Updated: 2 May 2021 8:58 PM GMT)

சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றது.

நாகர்கோவில்:
சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களை கைப்பற்றியது.  அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றது.

6 சட்டசபை தொகுதிகள்

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடை தேர்தலும், 6 சட்டசபை தொகுதிகளுக்கான பொது தேர்தலும் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. -பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும் 5 அணிகளாக போட்டியிட்டன. அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கூட்டணிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவியது. அ.தி.மு.க. கூட்டணியில் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வும், நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பா.ஜனதாவும், கிள்ளியூர் தொகுதியில் த.மா.கா.வும் போட்டியிட்டன.
தி.மு.க. கூட்டணியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம் ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க.வும், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டன. 

மீண்டும் களம் இறங்கிய  எம்.எல்.ஏ.க்கள்

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளையும் தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் தலா 3 இடங்கள் என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக இருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் மீண்டும் அவரவர் தொகுதிகளிலே களமிறக்கப்பட்டனர். தேர்தலில் இரு அணிகளும் வலுவாக மோதின.
வாக்கு எண்ணிக்கை நேற்று நாகர்கோவில், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தொடக்கத்தில் இருந்தே தளவாய்சுந்தரத்துக்கும், ஆஸ்டினுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் தளவாய்சுந்தரம் வெற்றி பெற்று கன்னியாகுமரி தொகுதியை தனது வசமாக்கிக் கொண்டார்.

எம்.ஆர்.காந்தி வெற்றி

இதேபோல் நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுரேஷ்ராஜனை பா.ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தோற்கடித்தார். பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க. ேவட்பாளர் ஜான்தங்கத்துக்கு எதிராக, தி.மு.க. வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி பெற்றார். விளவங்கோடு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஜெயசீலனுக்கு எதிராக, காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றி பெற்றார்.
குளச்சல் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ரமேசுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ் வெற்றி பெற்றார். கிள்ளியூர் தொகுதியில் த.மா.கா. வேட்பாளர் ஜூட் தேவ்வை,  காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் தோற்கடித்தார். இதனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல் ஆகிய 4 இடங்களை கைப்பற்றி உள்ளது. 
அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் இந்த 2 தொகுதிகளையும் தி.மு.க.விடம் இருந்து அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார்.

Next Story