4 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை


4 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்த வாக்கு எண்ணிக்கை
x
தினத்தந்தி 3 May 2021 2:50 AM IST (Updated: 3 May 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்தது.

அரியலூர்:

வாக்கு எண்ணும் பணி
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்(தனி) தொகுதிக்கு உட்பட்ட 428 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்திலும், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட 388 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை மையத்திலும் நடைபெற்றது.
மேலும் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொகுதிக்கு உட்பட்ட 376 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 377 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்றது.
சோதனை
இதையொட்டி நேற்று காலை வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்த அரசு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. ேமலும் கொரோனா தொற்று இல்லை என்ற சான்று பெற்ற வந்தவர்களே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதையொட்டி தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி, தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள் அறைகள் திறக்கப்பட்டன. அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குகள் எண்ணப்பட்ட அறைக்கு கொண்டு வரப்பட்டன.
விறுவிறுப்பாக நடந்தது
அங்கு எந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த ‘சீல்' முகவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. முன்னதாக தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் பெரம்பலூர் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 32 சுற்றுகளாகவும், குன்னம் தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு 28 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட்டன.
அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு முறையே 27, 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.
சுற்றுவாரியாக அறிவிப்பு
ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விவரத்தை அறிவிப்பு பலகையில் எழுதினார்கள். மேலும் ஒவ்வொரு சுற்றுக்கான விவரம் அந்தந்த வேட்பாளர்கள், அவர்களுக்கான முகவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியில் கூட்டம் கூடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்த கல்லூரிகள் முன்பு கட்சியினர், பொதுமக்களின்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரையிலும் கம்புகளால் தடுப்புகள், இருப்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது, அந்த தொகுதிக்கு உட்பட்ட வாரியங்காவலில் பெண்களுக்கான வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவாகியிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டது. பின்னர் கடைசியாக அந்த எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதேபோல் குன்னம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது 3 எந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இறுதியாக அந்த வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

Next Story