மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் மூடப்படுவதால் காய்கறிகள் அழுகி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு


மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் மூடப்படுவதால் காய்கறிகள் அழுகி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு
x
தினத்தந்தி 6 May 2021 2:48 PM GMT (Updated: 6 May 2021 2:55 PM GMT)

மதியம் 12 மணிக்கு மேல் கடைகள் மூடப்படுவதால் காய்கறிகள் அழுகி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.

ஊட்டி,

மலைமாவட்டமான நீலகிரியில் கேரட், பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மலைக்காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக கேரளா, கர்நாடகா மற்றும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

 இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் மண்டிகள் மதியம் 12 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டது.

 இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் காய்கறிகளை அறுவடை செய்த விவசாயிகள் நேற்று காலை 6 மணிக்கு மார்க்கெட்டுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வந்தனர். இதனால் மார்க்கெட் நுழைவுவாயில் திறக்கப்படுவதற்கு முன்பே சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் மார்க்கெட் திறக்கப்பட்டு காய்கறிகள் ஏலம் விடப்பட்டது.

தொடர்ந்து தொழிலாளர்கள் காய்கறிகளை தரம் பிரித்து மூட்டைகள் மற்றும் பார்சல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். அவை மதியம் 12 மணிக்கு முன்னர் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. இருப்பினும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மதியத்திற்கு பின்னர் கடைகள் செயல்படாததால், சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் காய்கறிகள் மறுநாள் விற்பனை ஆகும். இதனால் காய்கறிகள் சேதமடைந்து வியாபாரிகளுக்கு உரிய விலை கிடைக்காது என கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வழக்கமாக ஊட்டியில் இருந்து காலை முதலே காய்கறிகள் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட வெளியிடங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் மதியம் 12 மணிக்குள் கடைகள் அனைத்தும் அடைக்கப்படுவதால், சரக்கு வாகனங்களில் செல்லும் காய்கறிகளை அன்றே விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. 

மறுநாள் காய்கறிகள் அழுகி சேதமடைந்து இருப்பதால் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story