குமரியில் கடைகள் அடைப்பு


குமரியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 May 2021 7:41 PM GMT (Updated: 2021-05-07T01:11:02+05:30)

குமரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மளிகை, காய்கறி விற்பனை பகல் 12 மணி வரை நடந்தது. இதர கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக மளிகை, காய்கறி விற்பனை பகல் 12 மணி வரை நடந்தது. இதர கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனினும் பாதிப்பு குறையாததால் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதாவது மளிகை மற்றும் காய்கறி கடைகள், டீக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்திருக்கலாம். இதுதவிர பிற கடைகள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் குறிப்பாக நாகர்கோவிலில் நேற்று காலை 6 மணிக்கே பெரும்பாலான மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. அங்கு காலையிலேயே ஆண்களும் பெண்களும் சென்று மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கினார்கள். இதே போல் டீக்கடைகளிலும் விற்பனை விறு, விறுப்பாக நடந்தது. இதே போல் மாவட்டம் முழுவதும் மளிகை, காய்கறி மற்றும் டீக்கடைகள் பகல் 12 மணி வரை திறந்து இருந்தன. அதன் பிறகு மூடப்பட்டன. இதே போல் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளும் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன.
கடைகள் அடைப்பு
இவை தவிர ஜவுளிக்கடை, நகைக்கடை, செல்போன் கடை, பாத்திரக்கடை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் செம்மாங்குடி சாலை, மீனாட்சிபுரம், கலெக்டர் அலுவலக சாலை, கேப் ரோடு, ஆராட்டு ரோடு ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன. 
அதே சமயம் கோட்டார் மார்க்கெட் காலை 6 மணி முதலே பரபரப்பாக காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து லாரிகளில் வந்த மளிகை பொருட்களை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர். பொருட்கள் வாங்குவதற்கும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர். குமரி மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், பலகோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியது என்று வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 
நாகர்கோவில் மாநகரில் ஓட்டல்களும் காலையில் 6 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனால் கட்டுப்பாடு காரணமாக ஓட்டலுக்குள் உணவருந்த யாரையும் அனுமதிக்கவில்லை. பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு ஓட்டல்கள் மூடப்பட்டது. பின்னர் 12 மணிக்கு மதிய உணவு வழங்குவதற்காக திறக்கப்பட்டு 3 மணிக்கு அடைக்கப்பட்டது. அதன் பிறகு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஓட்டல்கள் செயல்பட்டன. 
பஸ்கள் இயக்கம்
அதே சமயம் குமரி மாவட்டத்தில் உள்ள 12 டெப்போக்களில் இருந்தும் அரசு பஸ்கள் நேற்று வழக்கம் போல இயங்கின. வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றன. அதில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு சென்ற பஸ்களில் அதை விட கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும் குறைவானவர்களே பயணம் செய்தனர்.
கடைகள் மூடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு பொது மக்கள் வருகை குறைவாக இருந்தது. ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆட்டோக்களில் கட்டுப்பாடுகளின் படி 2 பேர் மட்டுமே ஏற்றி செல்லப்பட்டனர். ஆட்டோக்களில் பயணம் செய்தவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர்.
 டாஸ்மாக் கடைகளில்    கூட்டம்
டாஸ்மாக் கடைகளை நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு 12 மணி வரை செயல்பட்டன. குமரி மாவட்டத்தில் மொத்தம் 113 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பல இடங்களில் மதுக்கடை திறப்பதற்கு முன்பே வாடிக்கையாளர்கள் கடைகள் முன் திரண்டிருந்தனர். இதனால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
நாகர்கோவிலில் சில இடங்களில் 12 மணிக்கு பிறகும் காய்கறி கடைகள் இயங்கி வந்தன. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று திறந்திருந்த கடைகளை மூடும்படி கூறினார். இதனையடுத்து கடைக்காரர்கள் கடைகளை மூடினர். புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பகல் 12 மணிக்கு பிறகு நாகர்கோவில் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால் எந்த கட்டப்பாடும் இல்லாமல் பால் மற்றும் மருந்துக்கடைகள் எப்போதும் போல் திறந்து செயல்பட்டன.

Next Story