‘டிரோன்’ மூலம் மருந்து தெளித்து கருவேல மரங்களை அழிக்கும் பணி


‘டிரோன்’ மூலம் மருந்து தெளித்து கருவேல மரங்களை அழிக்கும் பணி
x
தினத்தந்தி 6 May 2021 8:12 PM GMT (Updated: 6 May 2021 8:12 PM GMT)

தமிழகத்திலேயே முதன்முறையாக ‘டிரோன்’ மூலம் சோதனை முறையில் கருவேல மரங்களை அழிக்கும் பணி ஜெயங்கொண்டத்தில் தொடங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:

கருவேல மரங்களை அழிக்க...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர பகுதியில் உள்ள கருவேல மரங்களை அழிக்க, ஆள் இல்லா விமானம்(டிரோன்) மூலம் மருந்து தெளிக்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு முத்துக்குமரன் தலைமை தாங்கினார். வேளாண் இளம் விஞ்ஞானி செல்வமணி, ரமேஷ், ராஜா ஆகியோர் பேசினர்.
ஆளில்லா விமானம் மூலம் கருவேல மரங்களுக்கு ரசாயன மருந்து தெளித்து அழிக்கும் பணியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் தொடங்கி வைத்தார். அப்போது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், கிராம ஊராட்சி குருநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
மருந்து தெளிப்பு
ஆளில்லா விமானத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் வருண்குமார் தலைமையிலான சவுந்தரரங்கபாண்டி, தங்கராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் இயக்கி ரசாயன மருந்து தெளித்தனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மற்றும் ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆளில்லா விமானம் மூலம் ஜெயங்கொண்டம் நகரைச் சுற்றி பல்வேறு இடங்களில் உள்ள கருவேல செடிகளை அழிப்பதற்காக மருந்து தெளிக்கும் பணியை தொடங்கினர்.
இந்த பணி தமிழகத்திலேயே முதன் முதலாக சோதனை அடிப்படையில் ஜெயங்கொண்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள சீமை கருவேல மரங்களில் மருந்து தெளித்து அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்திலேயே முதன்முறையாக...
இதனை காணொலி காட்சி மூலம் பார்வையிட்ட இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, அதன்படியே நிருபர்களிடம் கூறுகையில், உலக அளவில் டிரோன் மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் டிரோன் மூலம் விவசாயத்திற்கும், மக்களுக்கும் ஊறு  விளைவிக்கும் கருவேல மரங்கள், பார்த்தீனிய செடிகள் உள்ளிட்ட தேவையற்ற மரம், செடிகளை அழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அண்ணா பல்கலைக்கழக மற்றும் ஐ.ஐ.டி. மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். சோதனை முறையில் தமிழகத்திலேயே முதல்முறையாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நடைபெறும் இப்பணி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின், தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு அரசிடம் இத்திட்டம் குறித்து தெரிவிக்கப்படும், என்றார்.

Next Story