புதிய கட்டுப்பாடுகளை மீறி வழக்கம்போல் திறக்கப்பட்ட கடைகள்


புதிய கட்டுப்பாடுகளை மீறி வழக்கம்போல் திறக்கப்பட்ட கடைகள்
x
தினத்தந்தி 6 May 2021 8:12 PM GMT (Updated: 2021-05-07T01:42:10+05:30)

அரியலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை மீறி அனைத்து கடைகளும் மதியம் வரை திறந்திருந்தன. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

அரியலூர்:

புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதில் பால், மளிகை, காய்கறி, மருந்து கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம், மற்ற அனைத்து கடைகளும் வருகிற 20-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் அரியலூரில் அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை வணிகர்களும், பொதுமக்களும் கடைபிடிக்கவில்லை.
அரியலூர் நகரில் நேற்று வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் விற்பதற்கு அனுமதிக்கப்பட்ட கடைகள் மற்றும் நகை, ஜவுளி, புத்தகங்கள், காலனி, பாத்திரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. மார்க்கெட் தெருவில் வழக்கமாக இருக்கும் தரை கடைகளை விட நேற்று அளவுக்கு அதிகமான கடைகள் இருந்தன. பஸ்களில் வழக்கம்போல் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களும் இயங்கின. ஆனால் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.
ஜவுளி கடைக்கு அபராதம்
அரியலூரில் ஒரு சில பெரிய ஓட்டல்களை தவிர மற்ற அனைத்து கடைகள், டீக்கடைகளில் பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிட்டதை காண முடிந்தது. பஸ் நிலையத்தில் கட்டுமான வேலைக்கு சென்றகள் மற்றும் பயணிகள் என பலர் முக கவசம் அணியாமல் கூட்டம், கூட்டமாக நின்று பேசிக்கொண்டும், வெற்றிலை பாக்கை போட்டு கண்ட இடங்களில் துப்பியவாறும் இருந்தனர். சாலையோரம் உள்ள தட்டுக்கடை, தள்ள வண்டி கடைகளை திறந்து மூடுவதற்கு காலதாமதமானது. இதையடுத்து அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை தலைமையில் தாசில்தார், நகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் போலீசார் நகர் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடச்சொல்லி எச்சரிக்கை செய்தனர்.
மேலும் எம்.பி கோவில் தெருவில் ஒரு ஜவுளிக்கடை கதவுகள் மூடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் துணிகள் எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தவுடன், தாசில்தார் உள்ளிட்டோர் அந்த கடைக்குள் சென்று பார்த்தபோது நூற்றுக்கணக்கானோர் கடையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் வெளியேற்றி கடைக்கு அபராதம் விதித்தனர். இதுபோன்று தொடர்ந்து கடைகளை திறந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்று எச்சரித்தனர்.
முழு ஊரடங்கை...
நேற்று மதியம் 12 மணிக்கு மேலும் மருந்து, பால், ஓட்டல்கள் திறந்து இருந்தன. மற்ற அனைத்து கடைகள், பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் பயணிகள் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வாங்க சிரமப்பட்டனர். ஒருசில தனியார் பஸ்கள் மட்டும் ஓடின. அரசு பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகள், அவசரகால வாகனங்கள் முழுமையாக செயல்பட்டன.
அரியலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் கொரோனா பரவல் குறித்து கேட்டபோது, கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் நோய்த்தொற்று இரு மடங்காக உயர்ந்து 112 ஆனது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சென்ற ஆண்டை போல் எந்தவித தளர்வும் இல்லாமல் போக்குவரத்து உள்பட 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்து பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் இருந்தால் தான், நோய்த்தொற்று பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இதே நிலை நீடித்தால் வடமாநிலங்களில் சாவு எண்ணிக்கை அதிகரிப்பது போல் தமிழகத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்று கூறினார்கள்.
உடையார்பாளையம், ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் நேற்று காலை அனைத்து ஜவுளிக்கடைகளும், பல்பொருள் அங்காடிகளும், மளிகை, காய்கறி கடைகளும், இருசக்கர வாகன விற்பனையகமும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளும் வழக்கம்போல் திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
ஆண்டிமடம் கடைவீதியில் நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. இதையறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஒலிபெருக்கி மூலம் அனுமதிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி கிடையாது, உடனடியாக மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் தவிர மற்ற கடைகளை வியாபாரிகள் உடனடியாக மூடினர். மதியம் 12 மணிக்கு பிறகு மருந்து கடை, பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் நகரில் பல்வேறு பகுதிகளிலும் மதியம் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டதால் ஜெயங்கொண்டம் கடைவீதி, 4 ரோடு, சன்னதி தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. ஜெயங்கொண்டம் நகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Next Story