தமிழகத்திற்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின்


தமிழகத்திற்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - முதலமைச்சர் ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 May 2021 10:57 AM GMT (Updated: 7 May 2021 11:02 AM GMT)

தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதலமைச்சர்  கலந்துகொண்டார்.

இதையடுத்து, முதலமைச்சராக பதவி ஏற்றபின் மு.க. ஸ்டாலின் எந்தத் திட்டத்துக்கு முதல் கையெழுத்தைப் போடப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில், தலைமைச் செயலகத்திற்குச் சென்று, கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 அளிக்கும் விதமாக இந்த மாதமே ரூ.2,000 வழங்கும் அரசாணை உள்ளிட்ட 5 அரசாணைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின், திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!" எனப் பதிவிட்டுள்ளார்.

Next Story