தூத்துக்குடி மாவட்டத்தில் 96 கொரோனா கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் 96 கொரோனா கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 7 May 2021 12:55 PM GMT (Updated: 7 May 2021 12:55 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் 96 கொரோனா கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 96 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் தினமும் 600 முதல் 700 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து உள்ளது. இதனை கண்காணிக்கவும் கொரோனா தடுப்பு களப்பணிகளை தீவிரப்படுத்தவும் 'ஏ' குரூப் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் 96 கள கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
குழுக்கள்
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு ஒரு மண்டலத்துக்கு 6 குழுக்கள் என மொத்தம் 4 மண்டலங்களுக்கும் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவில்பட்டி நகராட்சி பகுதிக்கு 36 வார்டுகளுக்கும் 6 குழுக்களும், காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு 18 வார்டுகளுக்கும் 2 குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சி பகுதிகளுக்கும் மொத்தம் 26 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 12 ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு மொத்தம் 38 குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 
மேற்பார்வை அலுவலர்கள்
இந்த குழுக்களில் உதவி அலுவலர்கள் மற்றும் போலீசார் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுக்களின் மேற்பார்வை அலுவலர்களாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு ஆணையர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளுக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தாலுகா பகுதிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி, கயத்தாறு தாலுகா பகுதிகளுக்கு கோவில்பட்டி கோட்டாட்சியர், ஏரல், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கட்டுப்பாட்டு மண்டலம்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு  இருப்பவர்களை கண்காணித்தல், காய்ச்சல் முகாம்களை கண்காணித்தல், நுண் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளை கண்காணித்தல் ஆகியவை இந்த குழுக்களின் முக்கிய பணியாகும்.
மேலும், கொரோனா பாதுகாப்பு விதிமுறை மீறல்களை கண்காணித்தல், குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளையும் இந்த குழுவினர் செய்வார்கள்.
இந்த குழுவினர் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தினமும் மாலை 5 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story