தூத்துக்குடியில் சித்தா மருத்துவ கண்காட்சி


தூத்துக்குடியில் சித்தா மருத்துவ கண்காட்சி
x
தினத்தந்தி 7 May 2021 1:13 PM GMT (Updated: 7 May 2021 1:13 PM GMT)

தூத்துக்குடியில் சித்தா மருத்துவ கண்காட்சி நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் சித்த மருத்துவ கண்காட்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
கண்காட்சி
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சித்த மருத்துவமனை சார்பாக சித்த மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்து, ஆயுதப்படை போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கி பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது:- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவதுறையினர். சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் மிகப்பெரிய பலன் கிடைத்து வருகிறது. கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக உள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது.
தடுப்பூசி
ஆகவே அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் முழுமையாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இங்கு வைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ கண்காட்சி மூலம் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியவற்றை வைத்து, எளிய முறையில் வீட்டில் வைத்தே கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயல்முறைகளை தெரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, உயிரிழப்புகள் தவிர்க்கப்படுகிறது. ஆகவே நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர்களான லதா, பிரீத்தா ஆகியோர் கண்காட்சி குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சஞ்சீவ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான் நன்றி கூறினார்.

Next Story