சவாரி கிடைக்காமல் தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள்


சவாரி கிடைக்காமல் தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 7 May 2021 2:19 PM GMT (Updated: 2021-05-07T20:44:55+05:30)

மதியம் 12 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டம் இல்லாததால் சவாரி கிடைக்காமல் ஆட்டோ டிரைவர்கள் தவிக்கின்றனர். மேலும் நிவாரண தொகை வழங்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்,

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகளை திறக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பிற கடைகளை திறக்க அனுமதி இல்லை.

அதன்படி அனுமதிக்கப்பட்ட கடைகளும் சரியாக மதியம் 12 மணிக்கு பிறகு அடைக்கப்பட்டு வருகிறது. அதன்பின்னர் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக கூடலூர் நகரில் மட்டும் சுமார் 2,500 ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ஊட்டி, குன்னூர் மற்றும் பந்தலூர் பகுதியில் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கூடலூரில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பெரும்பாலானோர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். ஆனால் தற்போது சவாரி கிடைக்காமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து கூடலூர் பகுதி ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:-

கடந்த காலங்களில் கொரோனா பரவலால் 2 பேரை மட்டுமே ஆட்டோவில் அழைத்து செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. 

தற்போது மதியம் 12 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்படுவதால், நகரில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்து விடுகிறது. இதனால் ஆட்டோ தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கவலை கூறினர்.

Next Story