கோத்தகிரியில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்


கோத்தகிரியில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம்
x
தினத்தந்தி 7 May 2021 3:21 PM GMT (Updated: 2021-05-07T21:14:49+05:30)

கோத்தகிரியில் 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கடைவீதி பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார். இவரது மகன் விஜயகுமார்(வயது 19). இவர் அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகுமார் இறைச்சி விற்பனை செய்வதற்காக ஊட்டிக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து சிறுமி திடீரென மாயமானார். அவரை பெற்றோர் தேடி வந்தனர். அப்போது சிறுமியை விஜயகுமார் கடத்தி சென்று திருமணம் செய்து, தனது வீட்டில் வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிறுமியின் அண்ணனுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து உள்ளார்.

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story