பெங்களூருவில் அரசு அலுவலகத்தில் நடந்த தம்பதி கொலையில் மகன் தலைமறைவு


பெங்களூருவில் அரசு அலுவலகத்தில் நடந்த தம்பதி கொலையில் மகன் தலைமறைவு
x
தினத்தந்தி 7 May 2021 5:03 PM GMT (Updated: 7 May 2021 5:03 PM GMT)

பெங்களூருவில் அரசு அலுவலகத்தில் நடந்த தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாகி விட்ட மகனை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

தம்பதி கொலை
பெங்களூரு பீனியா அருகே வசித்து வந்தவர் அனுமந்தராயா (வயது 42). இவரது மனைவி ஹொன்னம்மா (36). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். பீனியாவில் உள்ள அரசு அலுவலகத்தில் அனுமந்தராயா காவலாளியாகவும், அங்கேயே துப்புரவு தொழிலாளியாக ஹொன்னம்மாவும் வேலை பார்த்து வந்தார்கள். நேற்று முன்தினம் காலையில் அவர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்திருந்தனர்.

பின்னர் அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் அனுமந்தராயா, அவரது மனைவி ஹொன்னம்மா பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள். இதை பார்த்து அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து பீனியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தம்பதியின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

மகன் தலைமறைவு

அப்போது அனுமந்தராயா, அவரது மனைவி ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த அலுவலகத்திற்குள் அனுமந்தராயாவுக்கு தெரிந்த நபா்களே வந்திருக்கலாம் என்றும், அவர்களே இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையில், அனுமந்தராயாவின் மகன் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரை பற்றிய எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

இதன் காரணமாக அனுமந்தராயா, அவரது மனைவியை மகனே கொலை செய்திருக்கலாம் என்றும், போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து பீனியா போலீசாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட அனுமந்தராயாவின் மகனை தேடிவருகிறார்கள். மேலும் 2 தனிப்படையும் அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்து வருகிறது.

Next Story