கொரோனா கட்டுப்பாடு மீறல் ஓட்டலுக்கு சீல் வைப்பு


கொரோனா கட்டுப்பாடு மீறல் ஓட்டலுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 7 May 2021 5:12 PM GMT (Updated: 7 May 2021 5:12 PM GMT)

விழுப்புரத்தில் அரசு கட்டுப்பாட்டை மீறிய ஓட்டலுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேலும் 24 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. விழுப்புரம் நகரில் அரசின் புதிய கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று நேற்று நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் திண்ணாயிரமூர்த்தி, ரமணன், வருவாய் அலுவலர் தமிழரசன், வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம், நகரமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
இவர்கள் விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி, கே.கே.சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, திருச்சி மெயின்ரோடு, கீழ்பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று பார்வையிட்டனர்.

ஓட்டலுக்கு ‘சீல்’ வைப்பு

அப்போது விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதியளித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள், ஓட்டலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த ஓட்டலில் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அந்த ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்களை நகராட்சி அதிகாரிகள் வெளியேற்றினர். அதன் பின்னர் அந்த ஓட்டலை அதிகாரிகள், பூட்டி சீல் வைத்தனர்.

24 கடைகளுக்கு அபராதம்

மேலும் நகரில் அனுமதி வழங்கப்படாத கடைகளான ஜவுளிக்கடைகள், ஆட்டோ மொபைல் கடைகள், செருப்பு கடைகள், செல்போன் கடைகள், ஆயில் கடைகள் உள்ளிட்டவை இயங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாறு இயங்கிய 24 கடைகளுக்கு மொத்தம் ரூ.12,900 அபராதமாக வசூலித்தனர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும், பால் விற்பனை நிலையங்கள், மருந்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம். இதர கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. அதையும் மீறி கடைகளை திறந்து வியாபாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று கடைகளின் உரிமையாளர்களை எச்சரித்தனர்.

Next Story
  • chat