சிக்கிம்-சீனா எல்லையில் பணியில் இருந்த வீரர் திடீர் சாவு


சிக்கிம்-சீனா எல்லையில் பணியில் இருந்த வீரர் திடீர் சாவு
x
தினத்தந்தி 7 May 2021 6:02 PM GMT (Updated: 2021-05-07T23:32:24+05:30)

சிக்கிம்-சீனா எல்லையில் பணியில் இருந்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திடீரென உயிரிழந்தார்.

கண்ணமங்கலம்

சிக்கிம்-சீனா எல்லையில் பணியில் இருந்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திடீரென உயிரிழந்தார். 

பாதுகாப்பு படை வீரர்

கண்ணமங்கலம் அருகில் உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் பெருமாள் கோவில் எதிரே வசித்து வருபவர் தன்ராஜ்கிரி. இவரின் ஒரே மகன் பிரகாஷ் (வயது 31), எல்லை பாதுகாப்பு படை வீரராகப் பணியாற்றி வந்தார்.

தற்போது சிக்கிம்-சீனா எல்லையில் பணியில் இருந்தபோது நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பிரகாஷ் உயிரிழந்ததாக, அவரின் மனைவி ரேகா என்ற ரேவதிக்கு (27) உடன் பணியாற்றி வரும் தேனி மாவட்ட வீரர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் பிரகாஷ் பணியாற்றி வரும் ராணுவக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகளிடம் போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளனர். ஆனால் ராணுவ அதிகாரிகள் சரியான தகவலை தெரிவிக்க மறுத்து விட்டதாக, பிரகாசின் தந்தை தன்ராஜ்கிரி தெரிவித்தார். 

எனினும், ஒண்ணுபுரம் கிராமத்தில் வசிக்கும் பெற்றோரும், உறவினர்களும் பிரகாசின் உடல் எப்போது சொந்த ஊருக்கு வரும் என எதிர் நோக்கி 2 நாட்களாகக் காத்திருக்கிறார்கள். அதற்காக வீட்டின் முன்பு சாமியானா பந்தல் அமைத்துள்ளனர். 

கணவர் மரணம் அடைந்த தகவலை ேகள்விப்பட்டதும் ரேவதி தன்னுடைய 2 மாத கைக்குழந்தையுடன் கதறி அழுது கொண்டிருக்கிறார். 

இதுகுறித்து ரேவதி கண்ணீர் மல்க கூறியதாவது:-

10-ந்தேதி உடல் வரும் என தகவல்

6-ந்தேதி (நேற்று முன்தினம்) காலை சிக்கிம்-சீனா எல்லையில் பணியில் இருந்தபோது கணவர் பிரகாஷ் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக, அவருடன் வேலை பார்க்கும் சக வீரர் ஒருவர் மூலமாக எனக்கு தகவல் கிடைத்தது. 

நாங்கள் 2 நாட்களாக ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இதனால் நாங்கள் கடும் வேதனையில் இருந்தோம். 

நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மூலம் எனக்கு தகவல் வந்தது. அதில், எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரகாசின் உடல் இன்னும் ஓரிரு நாட்களில், அதாவது 10-ந்தேதி ஒண்ணுபுரம் கிராமத்துக்கு வரும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரகாஷ் மரணம் அடைந்த தகவலை கேள்விப்பட்டு கிராம மக்களும், உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர்.
 
அவரை தான் நம்பி இருந்தோம்

எல்லை பாதுகாப்பு படை வீரர் பிரகாசின் தந்தை தன்ராஜ்கிரி கூறுகையில், எனது மகன் உயிரிழந்த தகவலை கேட்டு நானும் எனது மனைவி ஜோதிலட்சுமியும் அதிர்ச்சி அடைந்தோம். 

எங்களுக்கு அவர் ஒரே மகன் என்பதால், வயதான காலத்தில் அவரை நம்பி தான் நாங்கள் இருந்தோம். இப்படி பிணமாக வருவான், எனக் கனவிலும் நினைக்கவில்லை. நாட்டுக்கும், வீட்டுக்கும் சேவை செய்ய சென்ற எங்கள் மகனின் இழப்ைப ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். எனக்கூறி கண்ணீர் விட்டு கதறினார். 

Next Story