பகல் 12 மணிக்கு மேல் சாலைகள் வெறிச்சோடின


பகல் 12 மணிக்கு மேல் சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 7 May 2021 6:15 PM GMT (Updated: 7 May 2021 6:15 PM GMT)

திருப்பூர் மாநகரில் நேற்று பகல் 12 மணிக்கு மேல் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காலையில் காய்கறி கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.

திருப்பூர்
திருப்பூர் மாநகரில் நேற்று பகல் 12 மணிக்கு மேல் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காலையில் காய்கறி கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனர்.
பகல் 12 மணி
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
மருந்து கடை, மருத்துவமனைகள், பால் வினியோக கடைகள், ஓட்டல்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
மளிகை கடைகளில் கூட்டம்
2-வது நாளாக நேற்றும் திருப்பூர் மாநகரில் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதால் பொருட்களை வாங்க மளிகை கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணிக்குள் கடைகளை அடைக்க வேண்டும் என்பதால் வேகவேகமாக வியாபாரம் நடைபெற்றது. 12 மணி தாண்டியதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கடைகளை அடைக்குமாறு எச்சரித்து வந்தனர்.
வெறிச்சோடிய சாலைகள்
உணவுப்பொருள்கள் தயாரிப்பு சம்பந்தமான கடைகளில் பொருட்களை அவசர அவசரமாக வாங்கி விட்டு மக்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மாநகரின் பிரதான சாலைகளான அவினாசி ரோடு, குமரன் ரோடு, பி.என். ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
தினசரி காய்கறி மார்க்கெட் பகல் 12 மணிக்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டது. புதுமார்க்கெட் வீதி கடைகள் அடைக்கப்பட்டன. காதர்பேட்டையில் உள்ள பனியன் விற்பனை கடைகள் முழுவதுமாக மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. காலை 10 மணி முதல் பகல் 12 மணிவரை மாநகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நேர கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட நேரத்துக்குள் பொருட்களை வாங்கி விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் இரு சக்கர வாகனங்களில் மக்கள் அதிகம் பேர் கடை வீதிகளுக்கு வந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.


Next Story