மன்னார்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழை


மன்னார்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழை
x
தினத்தந்தி 7 May 2021 6:33 PM GMT (Updated: 2021-05-08T00:03:47+05:30)

மன்னார்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மன்னார்குடி;
மன்னார்குடியில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
கொட்டித்தீர்த்த பலத்த மழை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர தொடக்க நாளில் பரவலாக மழை பெய்தது. 
இந்தநிலையில் நேற்று மதியம் மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, மூவாநல்லூர், பைங்காநாடு உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் சிறிது நேரம் கழித்து  பலத்த மழையாக சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. 
விவசாயிகள் மகிழ்ச்சி 
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன. மன்னார்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்த மழை வயல்களில் பயிடப்பட்டுள்ள உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த மழையால் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
வடுவூர்
இதைப்போல வடுவூர் பகுதியில் நேற்று மிதமான மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் வடுவூரில் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் நேற்று வடுவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வடபாதி, தென்பாதி, எடமேலையூர், செருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story