முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 7 May 2021 7:16 PM GMT (Updated: 2021-05-08T00:46:50+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்புக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

கரூர்
பாராட்டுக்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, நேற்று பதவி ஏற்றதும் முதல் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதுகுறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:- 
கரூர் தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம்:-
தமிழக அரசு ஆவின்பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. விலை வாசி உயர்ந்து வரும் நேரத்தில் ஆவின்பால் விலை குறைப்பு ஏழை, மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்கள்.
வரவேற்கத்தக்கது
கரூர் அரசுகாலனியை சேர்ந்த முத்துமாரி:- கொரோனா பரவலால் பொதுமக்கள் பலர் வேலை இல்லாமல் வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் இந்தவேளையில், தமிழக அரசு கொரோனா நிதியாக ரூ.4 ஆயிரம் அறிவித்து, முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இது ஏழை, எளியோர் வேலைக்கு செல்லும் எங்களை போன்ற குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏழைகளுக்கு உதவும்
கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்:-கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது வரவேற்க்கத்தக்கது. ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த அறிவிப்பு ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
எதிர்பார்க்காத ஒன்று
குளித்தலை காங்கிரசோடு தெருவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எம்.சுந்தரமூர்த்தி:- தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் என்று அறிவித்தது மக்கள் எதிர்பார்க்காத ஒன்றாகும். இது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் வசதி இல்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பயனடைவார்கள்.
குடும்ப செலவிற்கு...
குளித்தலை கிழக்கு மடவாளர் தெருவை சேர்ந்த குடும்பத்தலைவி சசிகலா சுரேஷ்குமார்:-தங்கள் குடும்ப வறுமை நிலையை போக்க கிராமப் பகுதிகளில் இருந்து நகரப்பகுதிக்கு கட்டுமான தொழிலுக்கும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் வேலைக்காக பெண்கள் தினசரி பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தற்போது பயணக் கட்டணம் இலவசம் என்கின்ற அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொகையை அவர்கள் குடும்ப செலவை நிர்வத்தி செய்ய ஏதுவாக இருக்கும். 
பயனுள்ளது
வெள்ளியணையை சேர்ந்த பவித்ரா சதீஷ்:-நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதிக்கு கூலி வே லைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா தாக்கத்தினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த ஆண்டில் இருந்து சரியான வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தி வரும் மக்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
மக்களின் இன்றைய நிலை அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைத்த திட்டங்கள் அனைத்தும் வரவேற்க கூடியது ஆகும்.
உதவியாக இருக்கும்
கரூர் ஆத்தூர் காந்திநகர் சுகன்யா:- தமிழக அரசு பெண்கள் நகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 
இது குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு பஸ்களில் செல்லும் பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும். இது என்னை போன்ற ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். தமிழக அரசுக்கு எனது பாராட்டுக்கள்.
ஆக்சிஜன் வழங்க  நடவடிக்கை
வெள்ளியணை அருகே உள்ள காணியாளம்பட்டி களத்தூரை சேர்ந்த காளியம்மாள்:-கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அரசு காப்பீடு வழங்கும் என்பதும், நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பதும், பால் விலையை குறைத்திருப்பதும், குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்க ஆணை பிறப்பித்து இருப்பதும் வரவேற்கத்தக்கது. 
கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தேவையான அளவு ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story