காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை


காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2021 7:44 PM GMT (Updated: 2021-05-08T01:14:28+05:30)

சுசீந்திரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலகிருஷ்ணன்புதூர், 
சுசீந்திரம் அருகே காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
காதல் திருமணம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நல்லூர் மறுகால்தலை காலனியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). இவர் வீட்டிலேயே செல்போன் மற்றும் லேப்டாப் பழுது நீக்கும் வேலை செய்து வந்தார். வடசேரி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சாரதா (35). திருமணமான இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவனும், சாரதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு இருவரும் நல்லூர் மறுகால்தலை காலனியில் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
மனைவி சாவு
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சாரதா இருதய நோய் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் உடல்நிலை மோசமானதை அடுத்து சாரதாவை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரமசிவன் அழைத்து சென்றார். 
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சாரதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பரமசிவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சாரதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தூக்கில் தொங்கினார்
இதையடுத்து சாரதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. மனைவி இறந்ததால் பரமசிவன் மனம் உடைந்து போனார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். எனினும் அவரை தேற்ற முடியவில்லை. இரவு வீட்டுக்கு வந்த பரமசிவன், சோகத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் படுக்கை அறைக்குள் சென்றார். அவரை தொந்தரவு பண்ண வேண்டாம் என குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
தொடர்ந்து அதிகாலையில் குடும்பத்தினர், வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு பரமசிவன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அவர்கள் கதறி அழுதனர். மனைவி கடைசியாக அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா மூலம் அவர் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது. 
இதுபற்றி தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பரமசிவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். 
 கடிதம் சிக்கியது
அதே சமயத்தில் போலீசார் அவரது படுக்கை அறையை சோதனை செய்தபோது, பரமசிவன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், என் மனைவி சாரதா இல்லாத உலகில் நானும் உயிர் வாழ மாட்டேன். எங்களது கடைசி ஆசை, எங்கள் இருவரையும் இணைத்து புதைக்க வேண்டும். எரிக்கக் கூடாது. எங்கள் இருவரையும் பிரிக்க வேண்டாம், ஒரே இடத்தில் கைகோர்த்தபடி புதைக்க வேண்டும். என் மனைவி கழுத்தில் அணிந்துள்ள தாலியை கழட்டக்கூடாது. என் சாவுக்கு நான் மட்டுமே காரணம், இப்படிக்கு பரமசிவன் சாரதா என எழுதப்பட்டிருந்தது.  இதையடுத்து பரமசிவன், சாரதா இருவரின் உடல்களும் நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story