நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா


நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 May 2021 7:49 PM GMT (Updated: 2021-05-08T01:19:47+05:30)

நாகர்கோவிலில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். குமரி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். குமரி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது.
553 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 500-ஐ தாண்டி வருகிறது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் நகரில் மட்டும் தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 207 பேர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாகர்கோவிலில் இதுவரை 200-க்கு உள்ளாக இருந்த கொரோனா பாதிப்பு 207 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளான 553 பேரில் 314 பேர் ஆண்கள், 239 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் சிறுவர்கள் 23 பேரும் அடங்குவர். இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது.
12 பேர் பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதைப் போன்று, கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக 15 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். நேற்று முன்தினமும் 12 பேர் இறந்தனர். இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 473 ஆக அதிகரித்து உள்ளது.
கடந்த சில தினங்களாக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி வருவது, டாக்டர்கள் மற்றும் சுகா தாரத்துறையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. நோய் பாதிப்பின் தீவிரத்தை அறிந்து கொரோனா கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடை பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
ஆணையர் பாதிப்பு
மாவட்டத்தில் நாகர்கோவிலில் மட்டும் அதிகமானோர் பாதிக்கப்படுவதால், மாவட்டத்தின் மற்ற இடங்களை காட்டிலும் நாகர்கோவில் நகர பகுதியில் நோய் தடுப்பு பணிகளும், சுகாதார பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகமாக நடமாடக்கூடிய பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் வீடு மற்றும் பணிபுரிந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நாகர்கோவில் நகரில் இதுவரை 16 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட சுகாதார பணிகள் தினமும் மேற்கொள்ளப்படுகின்றன.
 மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொற்று பாதித்த பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது மட்டுமின்றி, களப்பணியில் நேரடியாக ஈடுபட்டு வந்தார்.
 இந்தநிலையில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்துக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அச்சம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்தது. இந்த நிலையில் பரிசோதனை செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு ஆஷா அஜித்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் பணிபுரிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆஷா அஜித்துக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் வங்கி மற்றும் தபால் ஊழியர்கள், சுகாதாரத்துறையினர் அடங்குவர். அரசு ஊழியர்கள் தொடர்ந்து தொற்று பாதிப்புக்கு உள்ளானதால், அரசு அலுவலகங்களில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் பாதிப்பு
இதேபோல் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். 
இதனால் அவர் பணிபுரிந்த அலுவலகத்தில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.

Next Story