மதுரையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஆயிரத்தை கடந்து உச்சம்


மதுரையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  முதன்முறையாக ஆயிரத்தை கடந்து உச்சம்
x
தினத்தந்தி 7 May 2021 7:59 PM GMT (Updated: 2021-05-08T01:29:52+05:30)

மதுரையில் ேநற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது. 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

மதுரை, மே.
மதுரையில் ேநற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு முதன்முறையாக ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது. 7 பெண்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ்
மதுரையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதில் நேற்று 8 ஆயிரத்து 500 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில, புதிய உச்சமாக 1051 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மதுரையில் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது இதுவே முதன்முறை.
நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 720 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 36 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 794 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 580 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து 23 ஆயிரத்து 720 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரையில் உள்ள 7 அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5,403-ஆக உயர்ந்துள்ளது.
14 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று மட்டும் மதுரையில் 14 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 9 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். 
அதாவது, 58, 53, 55, மற்றொரு 53, 36, 73, 72 ஆகிய வயதுடைய 7 ெபண்களும்,  38, 54, 55, 49, 41, 72, 78 வயது என 7 ஆண்களும் உயிரிழந்தனர். இவர்களுக்கு கொரோனா நோய் பாதிப்புடன் வேறு சில நோய் பாதிப்புகள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கொரோனாவின் 2-வது அலை மிக கடுமையாக இருக்கிறது. அதிலும், உயிரிழப்புகள் அதிகம் இருக்கின்றன. கொரோனா முதல் அலையில் இருந்ததைவிட, தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதன் விளைவாகவே உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன. எனவே மக்கள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்றனர்.

Next Story