நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்


நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 7 May 2021 8:40 PM GMT (Updated: 7 May 2021 8:40 PM GMT)

நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று, தற்போது நலிந்த நிலையில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள், 2019-20-ம் ஆண்டிற்கு ஓய்வூதிய உதவித்தொகையாக மாதம் ரூ.3 ஆயிரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று இருக்க வேண்டும். அந்த போட்டிகளில் முதலிடம் அல்லது 2-ம் இடம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆகியவை விண்ணப்பிக்க தகுதியான போட்டிகள் ஆகும். சர்வதேச போட்டிகளாயின், குறைந்தபட்சம் ஆறு நாடுகள் பங்கேற்ற போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். இளவயதில் பங்கேற்ற, வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். கடந்த மாதம் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை. தகுதியானவர்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வருகிற 19-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணிலும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 9360870295 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), ரத்னா (அரியலூர்) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story