கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீன்மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் வரிசையில் நிற்க தடுப்புகள் அமைப்பு


கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீன்மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் வரிசையில் நிற்க தடுப்புகள் அமைப்பு
x
தினத்தந்தி 7 May 2021 8:43 PM GMT (Updated: 7 May 2021 8:43 PM GMT)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீன்மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் நிற்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி, 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீன்மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் நிற்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மீன்மார்க்கெட்
திருச்சி உறையூர் காசிவிளங்கி பகுதியில் மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. மீன்கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகஅளவில் பொதுமக்கள் திரண்டதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டு வந்தது. 
இரும்பு தடுப்புகள்
இதையொட்டி வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படும் என்றும், சனி, ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமையே மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர்.
இதன்காரணமாக திருச்சி மீன்மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமையான நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் கொரோனா பரவலை தடுக்க திருச்சி மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நிற்பதற்காக மாநகராட்சி சார்பில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 
சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என இரு பகுதிகளிலும் இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் இடைவெளியுடன் நிற்க பெயிண்ட்டால் வெள்ளைநிறத்தில் வட்டமிட்டமிடப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள்
இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து மீன்களை ஏற்றி கொண்டு வரும் கனரக வாகனங்களை மீன்மார்க்கெட்டுக்குள் ஆக்கிரமித்தபடி நிறுத்தி கொள்வதால் இடநெருக்கடி ஏற்படுவதாகவும், அதனாலேயே போதுமான இடவசதி இல்லாததால் மீன்கள் வாங்க வருவோர் நெரிசலில் நிற்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே மீன்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் சரக்குகளை இறக்கியவுடன் உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story