கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு உள்பட மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு சேலம் மக்கள் வரவேற்பு


கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு உள்பட மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு சேலம் மக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 7 May 2021 11:08 PM GMT (Updated: 2021-05-08T04:38:32+05:30)

மு.க.ஸ்டாலினின் 5 அறிவிப்புகளுக்கு சேலம் மக்கள் வரவேற்பு

சேலம்:
கொரோனா நிவாரணம், ஆவின் பால் விலை குறைப்பு, பஸ்களில் இலவச பயணம் உள்பட 5 திட்டங்கள் குறித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு சேலம் மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக முதல்-அமைச்சராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றவுடன் தலைமை செயலகத்திற்கு சென்றார். பின்னர் அவர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இதற்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
வரவேற்கிறோம்
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் ஜெயலட்சுமி:-
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ஆவின் பால் விலை குறைப்பை அனைத்து தரப்பு பெண்களும் வரவேற்கிறோம். கொரோனா ஊரடங்கால் ஏற்கனவே பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
அதை கருத்தில் கொண்டு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியாக அறிவித்து தற்போது இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை பெண்கள் அனைவரும் வரவேற்கிறோம். அதேபோல், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
மனுக்கள் மீது தீர்வு
அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த வைத்திலிங்கம்:- 
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொருளாதாரத்தை இழந்து வாழும் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல்நாளிலே மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
இதேபோல், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண தனி அதிகாரியை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..
மகிழ்ச்சியாக இருக்கிறது
சேலம் ராஜகணபதி நகரை சேர்ந்த இல்லத்தரசி ஷைராபானு:-
தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதேபோல் அவர் வந்துவிட்டார். கொரோனா நிவாரண தொகை ரூ.4 ஆயிரம், பால் விலை குறைப்பு, மகளிருக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம், காப்பீடு திட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை போன்றவைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். 
இதனை குடும்ப பெண்கள் அனைவரும் வரவேற்கிறோம். தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோன்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
பெண்களின் பொருளாதாரம் மேம்படும்
தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி அமுதராணி:-
கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் சிரமப்பட்டு வருகிறோம். இந்தநிலையில் ரேஷன் கார்டுக்கு ரூ.4 ஆயிரம் அறிவித்து முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொடுப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதேபோல் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாகவும் அறிவித்துள்ளார். இதையும் தாயுள்ளத்தோடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களும் வரவேற்கிறோம். அனைத்து மகளிருக்கும் நகர்ப்புற பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளதால் பெண்களின் பொருளாதாரம் மேம்படும்.
இலவச பயணம்
பனமரத்துப்பட்டியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் செல்வகுமார்:- 
கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு நகர பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 அம்சங்களை உடனடியாக நிறைவேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறேன். அதேபோல், தமிழகத்தில் தொழில் வளம் மேம்படவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.

Next Story