நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கொள்கலனை கண்காணிக்க சிறப்பு குழு; கலெக்டர் மெகராஜ் தகவல்


நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கொள்கலனை கண்காணிக்க சிறப்பு குழு; கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 8 May 2021 12:52 AM GMT (Updated: 8 May 2021 12:52 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனை கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனை கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார்.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டு பலர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் போதிய படுக்கை வசதிகள் இல்லாததாலும் பலர் இறந்து வருகிறார்கள். இதனிடையே படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் சிலர் ஆக்சிஜன் தடுப்பாட்டாலும் பலியாகி வருகிறார்கள்.
நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள ஆச்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் உற்பத்தியை அதிகரிக்க தொழிற்சாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளன.
கண்காணிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ஆக்சிஜன் இருப்பு மற்றும் தேவை குறித்த விவரங்களை நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கலெக்டர் மெகராஜ் தினமும் ஆக்சிஜன் இருப்பு குறித்து நேரடியாக கண்காணித்து வருகிறார். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. ஆனால் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை என்று கூறி, புகாரினை கலெக்டர் மெகராஜ் மறுத்துள்ளார்.
தட்டுப்பாடு இல்லை
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:-
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான சிறப்பு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த குழு ஆக்சிஜன் இருப்பு மற்றும் நோயாளிகளின் விவரங்களை தொடர்ந்து கண்காணிக்கிறது. புதிய நோயாளிகளின் வருகை மற்றும் குணமடைபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆக்சிஜன் தேவை இருக்கும். தற்போது வரை நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டர் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
ஆக்சிஜன் கொள்கலனில் 30 சதவீதம் ஆக்சிஜன் குறையும்போதே அரசுக்கு தகவல் தெரிவித்து, திரவ ஆக்சிஜனை பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
8,500 லிட்டர் இருப்பு
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆக்சிஜன் கொள்கலனில் இன்று (நேற்று) காலையில் 4 ஆயிரத்து 500 லிட்டர் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 4 ஆயிரம் லிட்டர் இருப்பு இருந்தது. இப்போது மொத்தம் 8 ஆயிரத்து 500 லிட்டர் திரவ ஆக்சிஜன் உள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறு கலெக்டர் மெகராஜ் கூறினார்.

Next Story