பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது


பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2021 12:52 AM GMT (Updated: 8 May 2021 12:52 AM GMT)

மயிலாடுதுறையில் அரசு விதிமுறையை மீறி பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் அரசு விதிமுறையை மீறி பகல் 12 மணிக்கு மேல் வியாபாரம் செய்த கடை உரிமையாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய கட்டுப்பாடு
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 
இந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக நேற்று முன்தினம் முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருந்தது.
3 பேர் கைது
 இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய பஸ் நிலையத்தில் அரசு விதிமுறைகளை மீறி மதியம் 12 மணிக்கு மேல் தொடர்ந்து டீ கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்த திருவிழந்தூர் அண்ணாநகரை சேர்ந்த ஞானசேகர் மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 
இதேபோல மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில் பகல் 12 மணிக்கு மேல் சர்பத் கடையில் வியாபாரம் செய்த திருவிழந்தூர் பொட்டவெளி தெருவை சேர்ந்த நாகையா (60) என்பவர் மீதும், மயிலாடுதுறை பஜனைமட தெருவில் துணி கடையை மூடாமல் வியாபாரம் செய்த குத்தாலம் கே.வி.எஸ். நகரை சேர்ந்த ஜெகபர் மகன் இம்ரான் (20) என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். 

Next Story