4-வது முறையாக புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு


4-வது முறையாக புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு
x
தினத்தந்தி 8 May 2021 2:53 AM GMT (Updated: 2021-05-08T08:23:31+05:30)

புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்-அமைச்சராக 4-வது முறையாக ரங்கசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு கவா்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ரெங்கசாமி

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க. 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி 8 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதையடுத்து ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுத்தது.

இதற்கிடையே போதுமான பெரும்பான்மை கிடைத்ததால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கியது. இதைத்தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3-ந் தேதி கவர்னர் தமிழிசையை சந்தித்து ரங்கசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

புதுச்சேரி முதல்-அமைச்சராக..

அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார். அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக்கொண்டார். 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்றுக் கொண்டார்.

பதவிப்பிரமாணம்

தேசிய கீதம் இசைக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும், முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 4-வது முறையாக புதுச்சேரியின் முதல்-அமைச்சராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்து

புதுச்சேரியின் 20-வது முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற நிலையில் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தபின் அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வந்தது. மக்களாட்சி மீண்டும் புதுச்சேரியில் மலர்ந்தது. ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவிகளும், பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய முதல்-அமைச்சராக பதவியேற்ற ரங்கசாமிக்கு அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் கையெழுத்து

கவர்னர் மாளிகையில் பதவி ஏற்ற பின்னர், சட்டப்பேரவைக்கு வந்த ரங்கசாமி நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி, புதிதாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர், கணவனை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செண்டாக் பணம் வழங்கும் 3 கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.


Next Story