நீலகிரி மாவட்டத்தில் நகர பஸ்களில் கட்டணமின்றி உற்சாகமாக பயணித்த பெண்கள்


நீலகிரி மாவட்டத்தில் நகர பஸ்களில் கட்டணமின்றி உற்சாகமாக பயணித்த பெண்கள்
x
தினத்தந்தி 8 May 2021 2:08 PM GMT (Updated: 2021-05-08T20:21:10+05:30)

நீலகிரி மாவட்டத்தில் நகர பஸ்களில் கட்டணமின்றி பெண்கள் உற்சாகமாக பயணித்தனர்.

ஊட்டி,

தமிழகத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்பட அனைத்து மகளிரும் நகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

நீலகிரி கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் நகர பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் உற்சாகமாக பயணம் செய்தனர்.

ஊட்டி-காந்தல் இடையே இயக்கப்படும் நகர பஸ்களில் வேலைக்கு செல்லும் பெண்கள், தூய்மை பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் பெண்கள் என அனைத்து மகளிரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்தனர். அந்த பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் முககவசம் அணிந்து, 2 இருக்கைகள் உள்ள சீட்டில் ஒருவர் என அமர்ந்து பயணித்தனர்.

ஊட்டி மற்றும் குன்னூர் பணிமனைகளில் இருந்து ஊட்டி-காந்தல் இடையே 4 பஸ்கள், ஊட்டி-தலைகுந்தா இடையே 2 பஸ்கள், குன்னூர் சிம்ஸ் பூங்கா வழியாக 4 பஸ்கள் உள்பட மொத்தம் இயக்கப்படும் 11 நகர பஸ்களில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெண்கள் கூறும்போது, நகர பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று வெளியான அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அன்றாடம் செலவில் ஒரு பகுதி குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.

ஊட்டி-காந்தல் இடையே இயக்கப்படும் நகர பஸ்கள் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. பெண்கள் இலவசமாக பயணிப்பதால் வருவாய் இழப்பு ஏற்படும். இதற்கான இழப்பு தொகையை போக்குவரத்துக்கழகங்களுக்கு அரசு வழங்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story