கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி


கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 8 May 2021 4:21 PM GMT (Updated: 2021-05-08T21:51:54+05:30)

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.

தளி
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்குகிறது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு 
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகு பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 
இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காக இன்று முதல் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் கோடைகால கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது.
பயிற்சி முகாம்
இதற்கான பயிற்சி முகாம் நேற்று உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது. கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகின்ற 15 ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம் கூறியதாவது:-
உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம் வந்தரவு வனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வனப் பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 
அப்போது முதல் மூன்று நாட்களில் சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடையங்கள் பதிவு செய்யப்படும். அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இறை விலங்குகள், தாவரங்கள், மனித இடையூறுகள், குளம்பினங்களின் எச்சம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 
அறிக்கை
மேலும் அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது. இறுதிநாளான 15 ம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வனவிலங்குகள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த முகாமில் வனச்சரக அலுவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் பங்கேற்றனர்.

Next Story