பஸ் கட்டணத்தை வீட்டுச்செலவுக்கு பயன்படுத்துவோம்


பஸ் கட்டணத்தை வீட்டுச்செலவுக்கு பயன்படுத்துவோம்
x
தினத்தந்தி 8 May 2021 5:22 PM GMT (Updated: 8 May 2021 5:22 PM GMT)

அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்த பெண்கள் பஸ் கட்டணத்தை வீட்டுச்செலவுக்கு பயன்படுத்துவோம் என்று உற்சாகமாக கூறினர்.

திருப்பூர், மே.9-
அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் செய்த பெண்கள், பஸ் கட்டணத்தை வீட்டுச்செலவுக்கு பயன்படுத்துவோம் என்று உற்சாகமாக கூறினர்.
 பெண்களுக்கு கட்டணம் இல்லை
தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் 266 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் செய்திருந்தனர்.
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. இதன்காரணமாக வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
மகிழ்ச்சியோடு பயணம்
குறிப்பாக டவுன் பஸ்களில் பெண்கள் ஆர்வமாக கட்டணமின்றி பயணம் செய்ததை காணமுடிந்தது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பஸ்களில் முன்புறம் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிப்பு ஓட்டப்பட்டு இருந்தது.
பனியன் நிறுவன பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் டவுன் பஸ்களில் செல்வது வழக்கம். நேற்றும் டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் மகிழ்ச்சியோடு பயணம் செய்தனர்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர்.
 வரப்பிரசாதம்
இதுபற்றி திருப்பூர் செட்டிபாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி மோகனா:-
வீட்டில் இருந்து பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கு டவுன் பஸ்சில் பயணம் செய்வேன். ஒருநாளுக்கு பஸ் கட்டணம் முப்பது ரூபாய் செலவாகும். அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்து, அதை உடனடியாக செயல்படுத்தியுள்ளார்.
எனக்கு தினமும் முப்பது ரூபாய் மிச்சமாகும். அதை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். ஊரடங்கு காலத்தில் வருமானம் இன்றி சிரமப்படும் இந்த சூழ்நிலையில் டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்பது எங்களைப்போன்ற தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாகும். தமிழக அரசுக்கு நன்றி.
மக்களாட்சி
தாராபுரத்தை சேர்ந்த இல்லத்தரசி சுபஸ்ரீ:-
ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் பஸ் போக்குவரத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். பெண்கள் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்து அடுத்த நாளே அதை செயல்படுத்திவிட்டார். இதை பார்க்கும்போது உண்மையான மக்களாட்சி என்று நினைக்கத் தோன்றுகிறது.
டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதால் அந்த பணத்தை குடும்ப செலவுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. வருமானம் இல்லாமல் சிரமப்படும் இந்த காலத்தில் இலவச கட்டணம் என்பது பெண்கள் வரவேற்கக்கூடிய ஒன்று. இதுபோல் அரசு ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் நலன் காக்கும் வகையில் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்வது சந்தோஷமாக இருக்கிறது.

Next Story