பஸ்களில் இலவசமாக பயணம் செய்த பெண்கள்


பஸ்களில் இலவசமாக பயணம் செய்த பெண்கள்
x
தினத்தந்தி 8 May 2021 7:53 PM GMT (Updated: 2021-05-09T01:23:03+05:30)

முதல்-அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து அரியலூரில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்தனர்.

அரியலூர்:

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண நகர (டவுன்) அரசு பஸ்களில் அனைத்து மகளிரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
அப்போது அனைத்து பெண்களும் நேற்று முதல் சாதாரண கட்டண நகர பஸ்களில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதையடுத்து சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டனர். இதில் இரும்புலிக்குறிச்சி, செந்துறை, திட்டக்குடி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட 23 நகர பஸ்களில் ஏராளமான பெண்கள், குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் காத்திருந்து இலவச பயணம் மேற்கொண்டனர். அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட நகர பஸ்களின் முன்பக்க கண்ணாடியில் மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

Next Story