இதுவரையில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேர் பலி 1,284 பேர் தொற்றால் பாதிப்பு


இதுவரையில் இல்லாத அளவில் கொரோனாவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேர் பலி  1,284 பேர் தொற்றால் பாதிப்பு
x
தினத்தந்தி 9 May 2021 12:39 AM GMT (Updated: 9 May 2021 12:39 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். 1,284 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர், 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு வருகின்ற 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை இரண்டு வாரம் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும், உரிய சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்து நடக்கவேண்டும், அடிக்கடி கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி செல்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரத்து 284 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 69 ஆயிரத்து 476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 61 ஆயிரத்து 312 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதில், 7 ஆயிரத்து 284 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 880 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் இதுவரையில் இல்லாத அளவிற்கு 17 பேர் இறந்து உள்ளனர்.

Next Story