கொரோனா கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்; பிரதமருக்கு, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம்
கொரோனா கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றுநாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 4 ஆயிரம் பேர் வரை தினமும் கொரோனாவுக்கு பலியாகின்றனர்.மருத்துவமனைகளின் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காதது தான் இதற்கு காரணம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை படுக்கைகள் அதிகம் இல்லை. இந்த எதிர்பாராத விதமாக 2-வது அலையில் இளைய தலைமுறையினரும் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி திட்டம் மெதுவாக செயல்படுகிறது.
மக்கள் பீதிகொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ், கார்கள் மற்றும் ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆஸ்பத்திரி முன்பு படுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரிதாப நிலை நாட்டு மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கியது. நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் வேலையில்லாமல் உள்ளனர்.
இதனால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பங்களுக்கு மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும்.
முழு ஊரடங்குஇந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் 1 மாதம் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு ஊரடங்கை அமல்படுத்தினால் தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த ஆண்டு நான் புதுச்சேரி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசால் 2 மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே தற்போது நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அப்போது தான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆயிரக்கணக்கான இந்திய மக்களின் உயிரை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.