பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் மாணவியை சந்தித்து பாராட்டு


பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் மாணவியை சந்தித்து பாராட்டு
x
தினத்தந்தி 12 May 2021 11:53 AM IST (Updated: 12 May 2021 11:53 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கட்டிடம் கட்ட 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்ததையடுத்து பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மாணவியை சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

பொன்னேரி, 

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பொன்னேரி தெற்கு பகுதியில் செயல்படுகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும, பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரியும் அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் அதிகை முத்தரசி என்ற மாணவி பல்வேறு அதிகாரிகளுக்கு புகார் செய்தார்.

இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனை தொடர்ந்து அந்த மாணவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து பள்ளிக்கு புதிதாக பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு உத்தரவிட்டு் ஓராண்டாகியும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிதரவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பள்ளி மாணவி அதிகை முத்தரசி கடிதம் எழுதினார்.

அமைச்சர் ஆய்வு

பள்ளியை ஆய்வு செய்யும்படி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற பின்னர் பொன்னேரி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா எம்.எல்.ஏ. க்கள் டிஜே.கோவிந்தராஜ், துரைசந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் பள்ளி மாணவி அதிகைமுத்தரசியை சந்தித்து பாராட்டி கோரிக்கை மனு குறித்து விசாரித்தார். புதிதாக பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும், பள்ளி அருகில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், பள்ளி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்:- முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தேன். ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பள்ளியின் ஆய்வு குறித்து முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்படும். தமிழகத்தில் எந்த பள்ளியின் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டாலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story