ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தடை அரசு உத்தரவு
ஜூன் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தை 2-வது கொரோனா அலை புரட்டி போட்டு உள்ளது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு தற்போது நோய் பாதிப்பு ஓரளவு குறைந்து உள்ளது. தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் மாநில அரசு வருகிற ஜூன் 30-ந் தேதி வரை அரசு அதிகாரிகள், ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2020-21-ம் நிதி ஆண்டு முடிந்துவிட்டது. தற்போது 2021-22-ம் நிதி ஆண்டு தொடங்கி உள்ளது. எனவே தற்போது நிதிஆண்டுக்கான பணியிடமாற்றங்களை எப்போது மேற்கொள்வது என நிர்வாக துறைகளிடம் இருந்து கேள்விகள் வரத்தொடங்கி உள்ளது. அதுகுறித்து மாநில அரசு பரிசீலித்தது. எனினும் தற்போது மாநிலத்தில் உள்ள கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வருகிற ஜூன் 30-ந் தேதி வரை எந்த பணியிடமாற்றங்களும் இருக்காது.
அதே நேரத்தில் இந்த காலகட்டத்திற்குள், பணி ஓய்வு காரணமாக ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, கொரோனா தடுப்பு பணியில் அத்தியாவசிய சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், தீவிர குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஊழியரின் இடத்தில் வேறு நபரை பணியமர்த்த மட்டும் பணியிடமாற்றம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story