காரைக்காலில் ஒப்பந்த பணிக்கு திரண்ட செவிலியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம்
காரைக்காலில் ஒப்பந்த பணிக்கு திரண்ட செவிலியர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றும், அதனால் ஏற்படும் உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, மாவட்ட நலவழித்துறையில் போதுமான டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி அரசு, 90 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில், 45 டாக்டர்கள், 120 செவிலியர்கள், கிராமப்புற செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் பிற ஊழியர்களையும் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டது.
அதன் முதல்கட்டமாக, 45 டாக்டர்களுக்கான நேர்முகத்தேர்வு நேற்று முன்தினம் காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 41 டாக்டர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில் நேற்று காலை, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலகத்தில், செவிலியர், கிராமப்புற செவிலியர் தேர்வுக்காக, சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட நலவழித்துறை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சமூக இடைவெளியை மறந்து ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். இதனை அங்கிருந்த ஊழியர்கள் ஒழுங்குப்படுத்த முயற்சித்தும், முடியவில்லை.
கொரோனா சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தும் நலவழித்துறை அலுவலகத்திலேயே சமூக இடைவெளியின்றி செவிலியர்கள் கூட்டம் கூடியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கட்டுக்கடங்காத கூட்டத்தால், இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த, செவிலியர் நேர்முகத்தேர்வு, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள கிராமப்புற செவிலியர் நேர்முகத்தேர்வு, லேப் டெக்னீசியன்கள் நேர்முகத்தேர்வு அண்ணா அரசு கல்லூரியில் நடைபெறுவதாகவும், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story